Published : 23 Jun 2014 12:06 PM
Last Updated : 23 Jun 2014 12:06 PM

கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்றோம்: தோனி

கடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களிலிருந்து நல்ல பாடம் கற்று கொண்டோம் என்றும், இந்த முறை அங்கு காத்திருக்கும் சவால்களை அறிவோம் என்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மும்பையில் செய்தியாளர்களை கேப்டன் தோனியும், பயிற்சியாளர் டன்கன் பிளெட்சரும் சந்தித்தனர்.

அப்போது தோனி கூறும்போது, "சில வீரர்கள் இங்கிலாந்துக்கு முதல் முறையாக வந்துள்ளனர். ஆனால், முக்கிய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் விளையாடி ஓரளவுக்கு அனுபவம் பெற்றுள்ளனர். ஆகவே இங்கிலாந்தின் சவால்கள் இவர்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்.

இன்னொரு நல்ல விஷயம், நாங்கள் முன்னதாகவே செல்கிறோம். எனவே, பயிற்சி ஆட்டங்களும் வலைப்பயிற்சியும் எங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு தயார் செய்து கொள்ள உதவும். இதற்கு முன்பு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதில்லை. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எங்களைத் தயார்படுத்திக்கொள்ள கால அவகாசம் உள்ளது.

துவக்க வீரராக சேவாகின் இடத்தை நிரப்புவது கடினம், அதேபோல்தான் ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண் மற்றும் கங்குலி இடங்களை நிரப்புவது மிகக் கடினம். எனவே, நாம் இவர்களுடன் இப்போதிருக்கும் தலைமுறையை ஒப்பிடக்கூடாது என்றே நினைக்கிறேன், நாம் இப்போதுள்ள தலைமுறை பற்றியே சிந்திக்கவேண்டும்.

இந்த இளம் வீரர்கள் இப்போதுதான் இந்திய அணிக்கு வந்திருக்கிறார்கள். நீண்ட நாட்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு இவர்கள் சேவை செய்யவுள்ளனர். நிறைய உள்நாட்டில்தான் ஆடியுள்ளனர், அயல்நாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவர்கள் தங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார் செய்து கொள்ளவேண்டும்.

இந்த முறை ஜாகீர் கானின் அனுபவத்தை இங்கிலாந்தில் இழக்கிறோம். ஜாகீர் கான் ஆட்டத்தின் தன்மையை வெகு சிறப்பாகக் கணித்து விரைவில் புரிந்து கொள்ளும் திறமையுடையவர். இப்போதைய நம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்பது உண்மைதான். அவர் இல்லாததை உணரவிடமால் இப்போதுள்ள வீரர்கள் பந்து வீசினால் சிறப்பாக இருக்கும். ஆனால் நாம் இப்போதே எதையும் கூறிவிடமுடியாது.

8 - 0 என்று நீங்கள் அழைக்கும் கடந்த இரண்டு தொடர்களிலிருந்தும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டோம். அந்தக் காலக்கட்டம் மிகவும் கஷ்டமானதே. எங்களால் வெற்றிகளைப் பெறமுடியவில்லை. எப்பவும் பின்னடைவைச் சந்தித்தோம், எங்களால் சவால் கொடுக்க முடியவில்லை. இந்தமுறை சவால்களை ஏற்படுத்தவேண்டும், அந்த நிலைக்கு உயர்ந்து விட்டால் 50 - 50 என்று வெற்றி வாய்ப்புகள் மாறும்.

மேலும் இந்த முறை 18 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அயல்நாடு செல்லும்போது வீரர்களின் காயம் பெரும் பின்னடவை அளித்து விடும். இந்த முறை 18 வீரர்கள் கொண்ட அணி என்பதால் மாற்று வீரர்கள் உள்ளனர். இதுவும் ஒரு நல்ல முடிவு என்றே கருதுகிறேன்.

ரிசர்வ் வீரர்களுக்கு அங்குள்ள சூழல்களுக்கு நன்றாகப் பழகி விடுவார்கள். ஆகவே யாராவது காயமடைந்தால் கூட அவர்கள் நேரடியாக விளையாடத் தயார் ஆகி விடுவார்கள்.

பயிற்சிதான் முக்கியம் எவ்வளவு வலைப்பயிற்சி அமர்வுகள் நடைபெறுகிறதோ அவ்வளவு பயன் விளையும். இந்த முறை கடந்த தொடரில் செய்த தவறுகளுக்கு இடமில்லை என்றே கருதுகிறேன்" என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x