காமன்வெல்த் போட்டிகள் 2022 | லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்தார்
பர்மிங்காம்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் கழகம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா வெண்கலம் வென்றிருந்தார். இவர் எதிர்வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடவுள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதனால் தனது பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் லவ்லினா. ஒலிம்பிக் பதக்கம் வெல்ல உதவிய தனது இரண்டு பயிற்சியாளர்களில் ஒருவர் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், தற்போது மற்றொரு பயிற்சியாளரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் தனது பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த ட்வீட் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சந்தியா குருங், பர்மிங்காம் சென்றுள்ள இந்திய அணியில் கடைசி நேரத்தில்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இருந்தாலும் ஞாயிறு அன்று அவர் அங்கு சென்றதும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெறாத காரணத்தால் அணியுடன் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
லவ்லினாவின் ட்வீட் காரணமாக இன்று காலை அவர் அணியுடன் இணைந்துள்ளார். அவர் அங்கு நேரில் அழைத்து வரப்பட்டு, அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
