

புதுடெல்லி: தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதனால் தனது பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தெரிவித்துள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
24 வயதான லவ்லினா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். இவர் எதிர்வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடவுள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும். அதனால் தனது பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் லவ்லினா.
தனது இரண்டு பயிற்சியாளர்களில் ஒருவர் ஏற்கெனவே வெளியேறி விட்டதாகவும், தற்போது மற்றொரு பயிற்சியாளரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் தனது பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காரணங்களுக்காகவே தான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன விதமான அழுத்தம் கொடுத்தாலும் இந்திய நாட்டுக்காக பதக்கம் வெல்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் தகுந்த நடவடிக்கை வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
அவரது பதிவு…