

வங்கதேச பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக நட்சத்திர பேட்ஸ்மென் மொகமட் அஷ்ரபுல் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
அவர் மேல் சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை 8 ஆண்டுகள் தடை செய்கிறோம் என்று இதனை விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார்.
இவர் மேலும் தனது தீர்ப்பில் ஒரு மில்லியன் டாக்கா, அதாவது 12,280 அமெரிக்க டாலர்கள், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் சிட்டகாங் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தனது அணி தோற்க அஷ்ரபுல் ஒரு மில்லியன் டாக்கா தொகையை லஞ்சமாகப் பெற்றதாக புகார் எழுந்தது.
பிறகு 10 நாட்கள் கழித்து பரிசால் பர்னர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியையும் அஷ்ரபுல் பிக்ஸ் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஜூன் 4, 2013 அன்று வெளியான செய்திகளின் படி அவர் ‘தேசத்திற்கு நான் இத்தகைய அநீதியைச் செய்திருக்கக்கூடாது, என்னை மன்னித்து விடுங்கள்’ என்றும் கூறியிருந்தார்.
நியூசிலாந்து முன்னாள் வீரர் லூ வின்சென் ட்டிற்கு 3 ஆண்டுகள் தடையும், இலங்கையின் கவுஷல் லொகுராச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டது.
அஷ்ரபுல் விளையாடிய டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஷிகாப் ஜிஷன் சவுத்ரிக்கு 10 ஆண்டுகள் தடையும், 2 மில்லியன் டாக்கா தொகையும் அபராதம் விதிக்கப்பட்டது.
மொகமட் அஷ்ரபுல் 17 வயதில் டெஸ்ட் சதம் எடுத்து 2001ஆம் ஆண்டு வங்கதேசத்தின் இளம் சத வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் பல சிறப்பான இன்னிங்ஸ்களை இவர் ஆடியதையும் மறக்க முடியாது. 2007 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இவரது ஆட்டம் இன்றும் பலரது நினைவுகளில் நிற்கும்.
வங்கதேசத்தினால் கொண்டாடப்பட்ட இவர் வங்கதேச பிரீமியர் லீக் இரண்டாவது தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதோடு சூதாட்டக்காரர்களுக்கும் உதவியிருக்கிறார். இதனை இவரே ஒப்புக் கொண்டும் விட்டார்.
தடை செய்யப்பட்ட இலங்கை வீரர் லொகுராச்சி 31 வயது வீரர். இலங்கைக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.