

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 312 ரன்கள் தேவை. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரையும் 2-0 என்ற கணக்கில் வெல்லும்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சதம் பதிவு செய்தார். 115 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கேப்டன் பூரன் 74 ரன்கள் எடுத்தார். கெய்ல் மேயர்ஸ் 39 ரன்களும், ப்ரூக்ஸ் 35 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி சார்பில் தாக்கூர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். சஹால், அக்சர் படேல் மற்றும் தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
இந்திய அணி 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. கேப்டன் தவான் மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகின்றனர்.