

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.
இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அதனால், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்தை சொல்லி வருகின்றனர். அவருக்கு இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
"ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்திய அணி வெல்ல உதவுவதே எனது நோக்கம். அதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ளேன்" என ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோலி. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
மோசமான ஃபார்ம் காரணமாக ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறார் கோலி. இந்த ஓய்வு அவரது ஃபார்மை மீட்டெடுக்க உதவும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.