

ஓரிகான்: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிப் போட்டியில் ஏழாம் இடம்பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் 61.12 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இருந்தார் அவர்.
பதக்கம் வெல்வதற்கான இறுதிச்சுற்றின் முதல் வாய்ப்பில் 56.18 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஆட்டத்தை தொடங்கினார் அன்னு. இரண்டாவது முயற்சியில் 61.12 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார். இருந்தாலும் அடுத்த நான்கு வாய்ப்புகளில் முறையே 59.27, 58.14, 59.98, 58.70 மீட்டர் தூரம் மட்டுமே அவர் ஈட்டியை வீசினார். அதனால் ஏழாம் இடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தார்.
66.91 மீட்டர் தூரம் ஈட்டியை வீசிய ஆஸ்திரேலிய வீராங்கனை கெல்சி-லீ பார்பர் இந்த பிரிவில் தங்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை இரண்டாவது இடமும், ஜப்பான் வீராங்கனை மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.
29 வயதான அன்னு ராணி 2017, 2019 மற்றும் 2022 என முறையே மூன்று முறை உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று விளையாடி உள்ளார். இரண்டு முறை இறுதி சுற்று வரை முன்னேறி உள்ளார். 63.82 மீட்டர் தூரம் ஈட்டியை வீசியது இவரது பெஸ்ட்டாக உள்ளது. தெற்காசிய விளையாட்டில் வெள்ளி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் மற்றும் வெள்ளி, ஆசிய விளையாட்டில் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் அன்னு.