Published : 22 Jul 2022 04:49 AM
Last Updated : 22 Jul 2022 04:49 AM

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

சீனியர் வீரர்களான மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்டோருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும்.

ஷிகர் தவணுடன் தொடக்க வீரராக ஷுப்மன் கில் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கக்கூடும். நடுவரிசையில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் பலம் சேர்க்கக்கூடும். சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக களமிறங்கக்கூடும்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குர் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக பிரஷித் கிருஷ்ணா, மொகமது சிராஜ் இடம் பெறக்கூடும். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா கூட்டணி நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியானது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரை அணுகுகிறது. ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் அணிக்கு திரும்பியிருப்பது வலுசேர்க்கக்கூடும். 2019-ம் ஆண்டுஉலகக் கோப்பைக்கு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர்களை முழுமையாக நிறைவு செய்து விளையாடுவதில் தடுமாற்றம் கண்டு வருகிறது.

இந்த வகையில் உலகக் கோப்பைக்கு பின்னர் 39 ஆட்டங்களில் அந்த அணி வெறும் 6 ஆட்டங்களில் மட்டுமே 50 ஓவர்களை முழுமையாக விளையாடி உள்ளது. இதனால் அந்த அணி மீது அதிகளவில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. இதற்கு இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் தீர்வு காண முயற்சி செய்யக்கூடும்.

— BCCI (@BCCI) July 21, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x