தங்கம் வென்ற வேதாந்த் கவுரவிப்பு: ஒடிசா முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் மாதவன்

மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வரை சந்தித்தார்.
மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வரை சந்தித்தார்.
Updated on
1 min read

புவனேஷ்வர்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், அண்மையில் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றார். இந்நிலையில், நடிகர் மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துள்ளார்.

இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்.

48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா மாநிலத்தில் கடந்த 16 முதல் 20-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பந்தய தூரத்தை 16:01.73 விநாடிகளில் கடந்து 742 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தார் வேதாந்த். அதன் மூலம் தங்கப் பதக்கம் வென்றார். அதோடு தேசிய சாதனையும் படைத்தார் அவர். இந்த தொடர் அம்மாநிலத்தில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், நடிகர் மாதவன் தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துள்ளார். அப்போது வேதாந்த் மாதவனுக்கு டி-ஷர்ட் ஒன்றை கொடுத்து வாழ்த்தி உள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக். இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாதவன்.

"ஒடிசா முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒடிசா மாநிலத்தை இந்திய நாட்டின் சிறந்த விளையாட்டு தளமாக உருவாக்க நீங்கள் முன்னெடுத்துள்ள உங்களது முயற்சிக்கு நன்றி. விளையாட்டின் எதிர்காலத்திற்காக நீங்கள் செலுத்தும் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது. உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார் மாதவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in