

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அவரது பேட்டிங் மட்டும் பவுலிங் செயல்பாடு எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இப்போது அவர் சொன்னபடி அதை செய்துள்ளார்.
"எரிபொருளை நிரப்பி எங்களை விளையாட சொல்ல நாங்கள் கார்கள் கிடையாது" என காட்டமாகவே கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை விமர்சித்திருந்தார் ஸ்டோக்ஸ். கடந்த 2021-இல் காலவரையின்றி ஓய்வு எடுத்துக்கொள்ளப் போவதாகவும் ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார்.
இருந்தும் சில மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் கம்-பேக் கொடுத்தார். இப்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் அவர்.
ஸ்டோக்ஸ் தனது கடைசி போட்டியில் 5 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 44 ரன்களை கொடுத்திருந்தார். பேட்டிங்கில் வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார் அவர்.