

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஒலிம்பிக் சாம்பியனான வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ், டிரிப்பிள் ஜம்ப்பில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.47 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் அவர், தங்கம் வென்றிருந்தார். ஜமைக்காவின் ஷானிகா ரிக்கெட்ஸ் 14.89 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டோரி பிராங்க்ளின் 14.72 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
அவினாஷ் ஏமாற்றம்
ஆடவருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் 11-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். பந்தய தூரத்தை அவர், 8:31.75 விநாடிகளில் கடந்தார். மொராக்கோவின் சோபியான் பந்தய தூரத்தை 8:25.13 விநாடிகளில் அடைந்து தங்கம் வென்றார். எத்தியோப்பியாவின் லமேச்சா கிர்மா (8:26.01) வெள்ளிப் பதக்கமும், கென்யாவின் கான்செஸ்லஸ் கிப்ருடோ (8:27.92) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.