

இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் நாளை இங்கிலாந்து களமிறங்குகிறது.இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஆக்ரோஷத்தைக் கூட்டுவாரா அல்லது அதே அறுவை ரக கேப்டன்சி உத்தியைக் கடைபிடிப்பாரா என்று ஷேன் வார்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி டெலிகிராபில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
குக் நிச்சயம் அணியை வழிநடத்திச் செல்லும் உத்தியில் ஆக்ரோஷம் காட்டவேண்டும், ஆனால் பழைய மாதிரி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசச் செய்து நெருக்கடியை மந்தமாக ஏற்படுத்தினால் அவர் தவறான பாதையை தேர்வு செய்துள்ளார் என்று பொருள்.
இங்கிலாந்து மீண்டும் மேட் பிரையரிடம் (விக்கெட் கீப்பர்) சென்றுள்ளது ஆச்சரியமளிக்கிறது, அணியை மறுக் கட்டமைப்பு செய்தால் பிரையரை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? ஏன் ஜோஸ் பட்லரைத் தேர்வு செய்யவில்லை? அவர் எவ்வளவு அபாயகரமான வீரர் என்பதை சமீபத்தில் நிரூபித்தவராயிற்றே? ஒருநாள் சதம் ஒன்றை அவர் அபாரமாக எடுத்துள்ளார். அவர் இத்தகைய ஃபார்மில் இருக்கும்போது பயன்படுத்தாவிட்டால் என்ன பயன்?
பிரையரைத் தேர்வு செய்திருப்பது பின்னோக்கிச் செல்வதாகும். பட்லருக்கு நியாயம் செய்யப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். பீட்டர் மூர்ஸ் தனது சசெக்ஸ் நட்பை விட்டுக் கொடுக்காமல் பிரையரை தேர்வு செய்துள்ளார் போலும்.
பிரையர் காயமடைந்து மீண்டும் வந்துள்ளார் அதுவும் கவுண்டி கிரிக்கெட்டில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. ஆகவே அவர் மீண்டும் கவுண்டி கிரிக்கெட்டிற்குச் சென்று அவருக்கு இன்னும் உயர்மட்ட கிரிக்கெட் ஆட தாகம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். என்று எழுதியுள்ளார்.
சசித்ர சேனநாயகே, ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன் அவுட் செய்தது பற்றி வார்ன் குறிப்பிடுகையில், “ஒருமுறைதான் என்றால் இலங்கை பற்றி நாம் கேள்வி எழுப்பலாம், ஆனால் அந்த குறிப்பிட்ட ரன் அவுட்டில் பட்லர் அவ்வளவு ஒன்றும் கிரீஸை விட்டு முன்னே சென்று விடவில்லை. கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்றெல்லம் பேச வேண்டியத் தேவையில்லை.
நான் இன்னமும் முன்னமேயே அவரை அதுபோன்று ரன் அவுட் செய்திருப்பேன், அதற்கு முந்தைய போட்டியில் நிறைய 2 ரன்கள் அவ்வாறு எடுக்கபப்பட்டது என்றால் அப்போதே அவ்வாறு ரன் அவுட் செய்ய வேண்டியதுதானே? ஏன் அடுத்த போட்டி வரைக் காத்திருக்க வேண்டும்” என்றார்.
இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் பற்றி ஆஷஸ் தொடரின் போதே ஷேன் வார்ன் கடும் விமர்சனங்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.