

எர்ணாகுளம்: கோலியின் அணியில் தான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் சில உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரீசாந்த். அதன் மூலம் மொத்தம் 169 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முக்கியமாக 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் விளையாடி உள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை பைனலில் பரபரப்பான கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து வெளியேற்றியவர். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி, கிரிக்கெட் விளையாடுவதற்கு தடையை எதிர்கொண்டார். ஏழு ஆண்டுகள் தடை காலம் முடிந்து டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடினார். கடந்த மார்ச் வாக்கில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், கோலியின் அணியில் தான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் சில உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும் என தெரிவித்துள்ளார்.
"விராட் கோலி தலைமையிலான அணியில் நான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்தியா மேலும் சில உலகக் கோப்பைகளை நிச்சயம் வென்றிருக்கும். விளையாடும்போது சில ட்ரிக்குகளை பின்பற்றுவது நல்லது. யார்க்கர் பந்து வீசுவது எப்படி என டென்னிஸ் பந்தில் தன எனது பயிற்சியாளர் எனக்கு பயிற்சி கொடுத்தார். பும்ராவிடம் கேட்டால் அது மிகவும் எளிதான காரியம் என சொல்வார்" என தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த்.
சினிமா மற்றும் சின்னத்திரையில் தனது என்ட்ரியை பதிவு செய்துள்ளார் ஸ்ரீசாந்த். தமிழில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.