

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 113 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது இந்திய அணி.
போட்டி முடிவடைந்ததும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, “ரிஷப் பந்த் அற்புதமான வீரர். மற்ற வீரர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவது அவருடைய மனநிலைதான் என்று நினைக்கிறேன்.
ரிஷப் பந்த் ஒரு அச்சமற்ற கிரிக்கெட் வீரர் மற்றும் அற்புதமான திறமைகளை கொண்டவர். டெஸ்ட், டி 20, ஒருநாள் போட்டி என கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அவரது ஆட்டம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. ரிஷப் பந்த் தனது அணியில் இருந்து எப்படி விளையாட விரும்புகிறாரோ, அதை விளையாடுவதற்கு அவருக்கு சிறந்த ஆதரவு கிடைக்கிறது என்றே நினைக்கிறேன்” என்றார்.