Published : 18 Jul 2022 06:37 AM
Last Updated : 18 Jul 2022 06:37 AM
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் மோதினர்.
போட்டியின் துவக்கத்தில் முதல்இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் அபாரமாக விளையாடி புள்ளிகளை தொடர்ச்சியாகக் குவித்து செட்டை 21-9 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனால் 2-வது செட்டில் சுதாரித்து ஆடிய சீன வீராங்கனை அந்த செட்டைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 3-வது செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து புள்ளிகளைக் குவித்து செட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம் இறுதிப் போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 2 பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி பட்டங்களை வென்று வருகிறார். இந்த ஆண்டில் அவர்வென்ற 3-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல், சுவிஸ் ஓபன் ஆகிய போட்டிகளில் பட்டங்களை வென்றிருந்தார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாழ்த்து
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘பி.வி.சிந்துதனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காகஎனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT