

ஓல்டு டிராபோர்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் விளாசினார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுஇருந்தன. இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு முதல் சில ஓவர்களிலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் சிராஜ். தனது முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை அவர் டக் அவுட் ஆக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஜோ ரூட்டையும் வெளியேற்றினார். ஆரம்பம் ஆட்டம் கண்டாலும், ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அவர்களின் அதிரடியால் 7.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ரன்களை கடந்தது.
இவர்கள் கூட்டணியை 10வது ஓவரில் பிரித்தார் ஹர்திக் பாண்டியா. அவரின் பந்துவீச்சில் ஜேசன் ராய் 41 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து பட்லர் - மொயின் அலி கூட்டணி உதவியால் இங்கிலாந்து அணி ரன்களை சேர்த்தது. எனினும் இந்திய பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு இந்தப் போட்டியிலும் டோப்லே வில்லனாக உருவெடுத்தார். முதல் விக்கெட்டாக ஷிகர் தவானை ஒரு ரன்னில் அவுட் ஆக்கியவர், அடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியையும் 17 ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக தொடங்கினாலும், 16 ரன்களில் அவுட்டானார்.
இதன்பின்தான் இந்திய அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சரிவில் இருந்த அணியை மீட்டனர். பந்தை பொறுத்தவரையில் அரைசதம் கடக்கும்வரை நிதானத்தை கடைபிடித்தவர், அதன்பிறகு அதிரடியாக விளையாடினார். அவருக்கு பக்கத்துணையாக இருந்த ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் கூட்டணி 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. பாண்டியா அவுட் ஆன பின் பந்த் உடன் இணை சேர்ந்த ஜடேஜா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
சிக்ஸர், பவுண்டரிகளாக இன்னிங்ஸை விளையாடிய பந்த், 105 பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதம் விளாசிய பின்னர் அவரின் அதிரடி அதிகமானது. குறிப்பாக, வில்லேவின் 42வது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த பந்த், 113 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.