Published : 17 Jul 2022 06:16 AM
Last Updated : 17 Jul 2022 06:16 AM
மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 2-வது ஆட்டத்தில் ரன் எடுக்காமலேயே திரும்பினார். அதேபோல் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.
அதனால் விராட் கோலி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவண் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, யுவேந்திர சஹல், மொகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற தீவிரமாக முயலும். பேட்டிங்கில் அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக உள்ளனர். பந்துவீச்சில் ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ் ஆகியோர் திறம்பட செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தர முயல்வர்.
பிற்பகல் 3.30 மணிக்கு...
இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சோனி டென் தொலைக்காட்சிகளில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT