

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா, ரஷ்ய வீராங்கனையான ஸ்வெட்லானா கஸ்னெட்சோவாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் முகுருசா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் பிரிவில் நடந்த 4-வது சுற்று போட்டியில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் மிலாஸ் ரோனிக், ஸ்பெயின் வீரரான ஆல்பர்ட் ரமோஸ் - வினோலஸை எதிர்த்து ஆடினார். தரவரிசையில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஆல்பர்ட் ரமோஸ் இப்போட்டியில் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று மிலாஸ் ரோனிக்குக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் ஆடவர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். மற்றொரு போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 7-6, 6-7, 6-3,6-2 என்ற செட்கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்னா ருமேனியா வின் புளோரின் மெர்ஜியா ஜோடி 6-2, 6-7, 6-1 என்ற செட்கணக்கில் மார்கஸ் டானியல் - பிரையன் பேக்கர் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு இரட்டையர் போட்டி யில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடி 7-6, 7-6 என்ற செட்கணக்கில் புரூனோ சோரஸ் ஜாமி முர்ரே ஜோடியை வென்றது. இதன் மூலம் பயஸ் - மார்சின் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆடவர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் செர்பியாவின் ஜோகோவிக், இங்கிலாந்தின் பிடேனை 6-2, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான பிரிவில் நடந்த 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் 6-4, 7-6 என்ற செட்கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா மாடனோவிக்கை வீழ்த்தினார்.