

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பவுலிங் தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசியதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. தனது பந்து வீச்சில் வெரைட்டி காட்டும் திறன் படைத்தவர். அவர் வீசும் பந்தை எதிரணி பேட்ஸ்மேன்களால் விளையாடவே முடியாது. அந்த அளவுக்கு Unplayable டெலிவரிகளை வீசும் பவுலர் அவர். அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து உலக சாதனை படைத்தது. 50 ஓவர்களில் மொத்தம் 498 ரன்களை குவித்தது அந்த அணி. அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு ரவுண்டு வந்தது. அப்படிப்பட்ட அணியின் பேட்ஸ்மேன்களை தான் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்திருந்தார் பும்ரா. அதுவும் இதனை இங்கிலாந்து மண்ணிலேயே நிகழ்த்தியிருந்தார்.
இந்த போட்டியில் 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் பும்ரா. இதில் 3 ஓவர்கள் மெய்டன். ஆட்டநாயகன் விருதையும் அவர் தான் வென்றார். அவரது அபார பந்துவீச்சு திறன் மூலம் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மொத்தம் 71 போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் பும்ரா. இந்திய அணியின் டி20 மற்றும் டெஸ்ட் பார்மெட்டுகளிலும் விளையாடி வருகிறார். அதிலும் அவர் டாப்கிளாஸ் பவுலர் தான். கடந்த 2020 பிப்ரவரி வாக்கில் பும்ரா கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். இப்போது மீண்டும் அந்த இடத்தை பிடித்துள்ளார்.