

அஸ்வினை குறைவாகப் பயன்படுத்துவதற்கு தோனியிடம் காரணங்கள் இருக்கலாம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துணைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் கருத்து தெரிவித்துள்ளார்.
கடைசி 20 டி20-களில் 10 போட்டிகளில் அஸ்வின் தனது 4 ஓவர்களை முழுதும் வீசவில்லை. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடிய 5 போட்டிகளும் அடங்கும்.
இந்நிலையில் தோனி, அஸ்வினைப் பயன்படுத்தும் விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் சைமன் கேடிச் கூறும்போது,
“நிச்சயமாக தோனியிடம் காரணங்கள் இருக்கும். அவர் மிகுந்த அனுபவம் பெற்ற வெற்றிக்கேப்டனாவார். டி20 போட்டியைப் பொறுத்தவரை கேப்டனைக் குறை கூறுவது கடினமாகும்.
ஆட்டத்தின் சில கணங்களில் இது அல்லது அது என்று கறாராக முடிவெடுக்க வேண்டி வரும். ஒரு திட்டம் வெற்றி பெற்றால் கேப்டனை ஜீனியஸாகத்தெரிவார், ஆனால் தோல்வியடைந்தால் அவரது உத்திகள் கேள்விக்குள்ளாகும்.
எனவே சுலபமல்ல. ஒரு பவுலரை பயன்படுத்துவது என்பது அவரின் பார்மின் அடிப்படையிலா, அல்லது பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையிலா அல்லது உள்ளுணர்வின் அடிப்படையிலா என்பது முக்கியம், இவற்றில் எதுவாக இருந்தாலும் நிச்சயம் காரணம் இருக்க வேண்டும்.
தோனியும் அந்தப் பாதையிலேயே ஏதோ காரணத்துக்காக சென்றிருப்பார், ஆனால் அவர்தான் இதற்கு விடையளிக்க வேண்டும், நான் அல்ல, என்றார்.