

கோவையில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேலம் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வென்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) தொடர் கடந்த ஜூன் 23-ம் தேதி முதல்நடைபெற்று வருகிறது. கோவையில் ராமகிருஷ்ணா கலை மற்றும்அறிவியல் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு சீகம் பேந்தர்ஸ் மதுரை மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மதுரை பேந்தர்ஸ் அணி முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அதற்கு பிறகு அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இளம் வீரர் ரித்திக் ஈஸ்வரன் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் சேலம் அணியின் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றிக்கு 166 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய சேலம் அணி தொடக்கம் முதலே வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. இருப்பினும் மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி, பிறகு அடுத்தடுத்து விக்கெட்டு களை இழந்து தடுமாறியது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்து, 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சீகம் பேந்தர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
சேலம் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பந்து வீச்சாளர் பிரணவ் குமார் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மதுரை அணியின் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள சேலம் அணி அடுத்து வரும் 4 போட்டி களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.