

ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 74 கிலோ எடை பிரிவில் இந்திய தரப்பில் இருந்து யார் கலந்து கொள்வது என்பதில் நரசிங் யாதவ், சுஷில் குமார் இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிடாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து சுஷில் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் சுஷில் குமார். 74 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வரும் இவர் கடந்த இரு ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.
இவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கனவில் இருந்தார். ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.
அந்த சமயத்தில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் லாஸ் வேகாஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார் கலந்து கொள்ளவில்லை. அதே பிரிவில் கலந்து கொண்ட நரசிங் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.
இந்த பிரிவில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் இந்திய மல்யுத்த சங்கம் நரசிங் யாதவை ரியோ போட்டிக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ஒலிம்பிக் போட்டிக்கு தன்னையே அனுப்ப வேண்டும் என்றும், இல்லையெனில் தனக்கும், நரசிங் யாதவுக்கும் இடையில் போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை இந்திய மல்யுத்த சங்கம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் சுஷில் குமார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதுகுறித்து மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறும்போது ‘‘இந்த பிரச்சினையில் மத்திய அரசு செய் வதற்கு ஒன்றுமில்லை. இந்திய மல்யுத்த சங்கம் தன்னாட்சி அதிகா ரம் பெற்றது. அதுதான் இறுதி முடிவை எடுக்கும்'' என்றார்.
மத்திய அரசு கைவிரித்துவிட்ட நிலையில் சுஷில் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த வீரரை தேர்வு செய்வதற்கு நரசிங் யாதவுடன் தான் மோதும் போட்டியை நடத்த இந்திய மல்யுத்த சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சுஷில் குமார் கூறும்போது, ‘‘யார் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்கெனவே முடிவு செய்திருந்தால், இந்திய மல்யுத்த சங்கம் என்னை நேரில் அழைத்து தெரிவித்திருக்கலாம். மேலும் மத்திய விளையாட்டு அமைச்சக விளையாட்டு திட்டத்தில் இருந்தும் எனது பெயரை நீக்கியிருக்கலாம்.
நானும் கடந்த ஒரு வருடமாக கடுமையாக பயிற்சி செய்திருக்க வேண்டியதில்லை. மேலும் அரசுக்கும் அதிக பணம் விரையம் ஆகியிருக்காது, பயிற்சிக்காக செலவிட்ட எனது நேரம் வீணாகியிருக்காது'' என்றார்.
இதற்கிடையே மல்யுத்த சங்கம் இன்று அவரச கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.