

லண்டன்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து யூனிட்டிலும் இந்திய அணி வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இப்போது சமர் செய்து வருகின்றன. ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் தவான் களம் இறங்கினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை வென்று கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 76 ரன்களும், தவான் 31 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றிருந்தார்.
முன்னதாக, இந்திய அணி டாஸ் வென்றதும் பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியை 25.2 ஓவர்களில் 110 ரன்களில் ஆல்-அவுட் செய்தனர் இந்திய பவுலர்கள். பும்ரா 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதில் 3 மெய்டன் ஓவர்களும் அடங்கும். ஷமி 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.