

ஓவல்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், சூர்யகுமார் யாதவ் (SKY) விளாசிய சதம் இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
216 ரன்கள் டார்கெட்டை துரத்திய இந்திய அணி 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களத்திற்கு வந்தார் சூர்யகுமார் யாதவ். அடுத்த சில பந்துகளில் கேப்டன் ரோகித்தும் தனது விக்கெட்டை பறிகொடுக்க, மொத்த அழுத்தமும் சூர்யகுமார் யாதவ் மீதும், ஷ்ரேயஸ் ஐயர் மீதும் விழுந்தது. ஷ்ரேயஸைவிட, அந்த அழுத்தத்தை திறமையாக கையாண்டது சூர்யகுமாரே. இங்கிலாந்து பவுலர்களை எளிதாக சமாளித்த அவர், 31 பந்துகளில் அரைசதமும் அடுத்த 17 பந்துகளில் சதமும் எடுத்தார்.
இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதமாகும். அதுமட்டுமில்லாமல், டி20 வரலாற்றில் சதம் பதிவு செய்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சூர்யா. எதிர்முனையில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அதனால் அழுத்தம் முழுவதும் சூர்யகுமார் மீது இருந்தது. 19-வது ஓவரில் அவுட்டானார் அவர். 55 பந்துகளில் 117 ரன்களை விளாசி இருந்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு என்டர்டெயின் செய்தார்.
இந்த ஆட்டத்தை அடுத்து அவருக்கு பாராட்டுகளை குவிந்துவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓப்பனர் ஆகாஷ் சோப்ரா சூர்யகுமாரின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதில், "சூர்யாவின் நேற்றைய நாக் வெறும் அதிரடி மற்றும் துணிச்சல் மிகுந்தது மட்டுமல்ல. அவற்றில் விளையாட்டைப் பற்றியும் நிறைய கற்றுக்கொள்ள இருந்தது. பீல்டர்கள் எங்கே இருக்கிறார்கள், பந்து வீச்சாளர்கள் எங்கே பந்து வீசுவார்கள் என்பதை அறிந்து விளையாடும் உணர்வு அவரிடம் இருந்து வெளிப்பட்டது. சூர்யா இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி" என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியிருக்கிறார். இந்தப் பதிவு வரவேற்புகளை பெற்றுவருகிறது.