Published : 12 Jul 2022 09:10 AM
Last Updated : 12 Jul 2022 09:10 AM

டிஎன்பிஎல் | சொந்த மண்ணில் களமிறங்கிய முதல் போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய கோவை அணி கேப்டன் ஷாருக்கான். படம்: ஜெ.மனோகரன்

கோவையில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை, லைகா கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) தொடர் கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு சொந்த மண்ணில் லைகா கோவை கிங்ஸ் அணி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் அதிரடியாக விளையாடி திருச்சி அணியின் முரளி விஜய் 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 19.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்தது. கோவை அணியின் அபிஷேக் தன்வாரி 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷாருக்கான், திவாகர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 136 ரன்கள் தேவை என்ற இலக்குடன் கோவை அணி பேட்டிங்கை தொடங்கியது.

சுரேஷ்குமார் 15 ரன்களிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் சாய் சுதர்ஷன் தலா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷாருக்கான் பொறுமையுடன் விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதோடு, சொந்த மண்ணில் களமிறங்கிய முதல் போட்டியில் வெற்றியைப் பெற்றுள்ளது.

கேப்டன் ஷாருக்கான் கூறும் போது, “அடுத்தடுத்து வெற்றி களைப் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. திருச்சி அணியுடனான இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கோவை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x