Published : 12 Jul 2022 05:51 AM
Last Updated : 12 Jul 2022 05:51 AM
லண்டன்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறுகிறது.
டி 20 தொடரில் இந்திய அணி மட்டை வீச்சில் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டிருந்தது. இதே பாணியை ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி தொடரக்கூடும். இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகப்பெரிய அளவிலான இலக்கை கொடுப்பதும், பெரிய இலக்காக இருந்தாலும் துணிச்சலுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்துவதும் அந்த அணி வாடிக்கையாக கொண்டுள்ளது. மோர்கன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஜாஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் ஷிகர் தவணுக்கு இந்தத் தொடர் சவாலானதாக இருக்கக்கூடும். அதேபோன்று கடந்த 3 வருடங்களாக சதம் அடிக்க திணறி வரும் விராட் கோலி இம்முறையும் நெருக்கடியுடன் களமிறங்குகிறார். டி 20 தொடரில் அவரிடம், சிறந்த மட்டை வீச்சு வெளிப்படவில்லை. அணியின் புதிய அணுகுமுறையால் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட வேண்டும் என்ற மனநிலையும் விராட் கோலியை தடுமாற வைத்தது. இருப்பினும் ஒருநாள் போட்டியில் போதுமான அளவு நேரம் இருக்கும் என்பதால் விராட் கோலி சிறந்த பார்முக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
டி 20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரில் வலுவாக மீண்டுவர முயற்சி மேற்கொள்ளும். பென் ஸ்டாக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் பேட்டிங்கை வலுப்பெறச் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT