

டி20 கிரிக்கெட்டில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுக்க, மழை காரணமாக கொல்கத்தா அணிக்கு 9 ஓவர்களில் 66 ரன்கள் இலக்கு டக்வொர்த் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது. இதில் உத்தப்பா, கம்பீர் ஆகியோரை அஸ்வின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினாலும் யூசுப் பதான் 18 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 37 ரன்களை விளாச கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்து வென்றது.
இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “டக்வொர்த் முறை மிக மோசமானது. டக்வொர்த் முறை நடைமுறைப்படுத்திய உடன் ஆட்டம் முடிந்து விடுகிறது. நான் இதனைப் பற்றி ஆண்டுக்கணக்கில் விமர்சித்து வந்துள்ளேன், மற்றவர்களும் விமர்சனம் வைத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை பேசியாக வேண்டும். இந்த முறையை மாற்ற விருப்பம் இல்லாமல் உள்ளது. டக்வொர்த் லூயிஸ் முறை டி20 போட்டிகளுக்கானதல்ல. இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும், இது முட்டாள்தனமானது” என்றார்.
புனே கேப்டன் தோனி 22 பந்துகளைச் சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்தது பற்றி பிளெமிங்கிடம் கேட்ட போது, “இது பேட் செய்வதற்குக் கடினமான பிட்ச். அடித்து ஆட வேண்டும் என்பதுதான் திட்டம், ஆனால் பந்துகள் திரும்பியதால் விக்கெட்டுகளை இழந்தோம். இந்த மாதிரி பிட்சில் விக்கெட்டுகளை இழப்போம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
எங்கள் இன்னிங்ஸ் 20 ஓவர்கள் சென்றிருந்தால் மேலும் 25 ரன்களை எடுத்திருப்போம், அல்லது இன்னும் அதிகமாக அடித்து ஸ்கோரை 135-140 என்று கொண்டு சென்றிருப்போம். 135 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம், தோனி கிரீஸில் இருந்தார். இதனால் கடைசி 2 ஓவர்களை குறிவைத்தோம் ஆனால் மழையால் அது நடைபெறாமல் போனது.
எங்கள் ஸ்பின்னர்களை வைத்து துரத்தலை கடினமாக்கியிருப்போம், ஆனால் டி/எல் முறை வந்தவுடன் எங்களுக்கு ஆட்டம் முடிந்து போனது” என்றார்.