பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியை சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்தார்.

இவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சஷாங்க் மனோகர் ஐசிசி சேர்மனாக இருந்து வருகிறார்.

வரும் ஜூன் மாதம் ஐசிசி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தத் தருணத்தில் சஷாங்க் மனோகரின் பிசிசிஐ பதவிக்காலமும் ஐசிசி சேர்மன் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

என்.சீனிவாசனுக்குப் பதிலாக சஷாங்க் மனோகர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு அக்டோபர் 2015-ல் நியமிக்கப்பட்டார். இது அவரது 2-வது பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்மோகன் டால்மியா மறைவையடுத்து சஷாங்க் மனோகர் அக்டோபர் 2015-ல் பிசிசிஐ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ செயல்பாடுகளில் சீர்த்திருத்தம் கோரும் முன்னாள் நீதிபதி முத்கல் கமிட்டியின் பரிந்துரைகள் மீதான தீவிர விசாரணை உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், சஷாங்க் மனோகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி-யின் புதிய விதிமுறைகளின்படி ஐசிசி தலைவராக பதவியேற்பவர் தன் சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பது கூடாது. இந்த அடிப்படையில்தான் அவர் தற்போது தனது பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய மே 23-ம் தேதி கடைசியாகும். தற்போது பிசிசிஐ தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்ததையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு மனோகர் பெயரை பிசிசிஐ முன்மொழிய வேண்டும்.

மனோகர் ராஜினாமா செய்ததையடுத்து ஒரே ஆண்டில் 2-வது முறையாக பிசிசிஐ தலைவரில்லாத அமைப்பாக மாறியுள்ளது. தற்போது பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்தி 2 வாரங்களுக்குள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் சேர்மன் ராஜிவ் ஷுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் முதனிலை வகிக்கின்றனர். முன்னாள் பொருளாளர் அஜய் ஷிர்கே, நடப்பு துணைத் தலைவர் கங்காராஜு ஆகியோரும் பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in