

மும்பை: மோசமான ஃபார்ம் காரணமாக கங்குலி, சேவாக், யுவராஜ் போன்ற வீரர்கள் எல்லாம் கடந்த காலங்களில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்போது, அதற்கு முன்பு அணிக்காக அவர்கள் அளித்த தரமான பங்களிப்பு எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியில் சீனியர் வீரராகவும் விளையாடி வரும் கோலியை தான் இப்படி சொல்கிறார் எனத் தெரிகிறது. ஏனெனில், அவர்தான் இப்போது மோசமான பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வருகிறார். அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என கபில் தேவ் சொல்லியிருந்தார். என்னுடைய டி20 அணியில் கோலிக்கு இடமில்லை என அஜய் ஜடேஜா சொல்லியிருந்தார்.
இப்போது கோலியை நேரடியாக சொல்லவில்லை என்றாலும் மறைமுகமாக அது குறித்து ட்வீட் செய்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.
"வீரர்கள் தங்களது மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு எதையும் கருத்தில் கொள்ளாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கங்குலி, சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் இந்தச் சூழலை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் டொமஸ்டிக் கிரிக்கெட்டுக்கு சென்று அங்கு தங்களது ஃபார்மை மீட்ட பிறகு மீண்டும் அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளனர். ஆனால் இப்போது இது மாறிவிட்டதாக தெரிகிறது. ஃபார்மில் இல்லாதவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் எந்த முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை.
நம் நாட்டில் திறன் படைத்த வீரர்கள் பலர் உள்ளனர். வெறுமனே சிறந்த வீரர் என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு இங்கு விளையாட முடியாது. இந்திய அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவரான கும்ப்ளே கூட கடந்த காலங்களில் இந்த கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளார். அணியின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
"கோலி ஒரு தரமான வீரர் அவருக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. ஃபார்மை பொறுத்த வரையில் அனைவருக்கும் ஏற்ற இறக்கங்கள் என்பது இருக்கும். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட வீரர் ஒருவர் வெறும் ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் ரன் சேர்க்க தவறினால் அவர் மோசமான வீரர் கிடையாது" என இந்திய அணியின் கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார்.