Published : 11 Jul 2022 05:18 AM
Last Updated : 11 Jul 2022 05:18 AM

தினேஷ் சந்திமால் சதம் விளாசல்: ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி பதிலடி

தினேஷ் சந்திமால்

காலே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தினேஷ் சந்திமால் சதம் விளாசினார். காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ஸ்டீவன்ஸ்மித் 272 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 145 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 156 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. பதும் நிசங்கா 6, திமுத் கருணாரத்னே 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 84, ஏஞ்சலோ மேத்யூஸ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

முன்னிலை..

குசால் மெண்டிஸ் 85 ரன்களில் நேதன் லயன் பந்திலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 52 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்திலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமாலுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். 120.5 ஓவரில் இலங்கை அணி 365 ரன்கள் சேர்த்து முன்னிலை பெறத் தொடங்கியது.

அபாரமாக விளையாடிய தினேஷ் சந்திமால் 195 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் தினேஷ் சந்திமாலின் 13-வது சதமாக இது அமைந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வெப்சன் பந்தில் போல்டானார். தினேஷ் சந்திமாலுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தார் கமிந்து மெண்டிஸ்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நிரோஷன் திக்வெலா 5 ரன்னில் நேதன் லயன் பந்தில் நடையை கட்டினார். நேற்றைய 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 149 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது. தினேஷ் சந்திமால் 118 ரன்களும், ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x