Published : 18 Jun 2014 05:23 PM
Last Updated : 18 Jun 2014 05:23 PM

வேகபந்து வீச்சைத் தலைமை தாங்க இஷாந்த் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு- திராவிட்

ஜூலை மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சை தலைமை தாங்க இஷாந்த் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ஜிலட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் திராவிட் இங்கிலாந்து தொடர் பற்றி பேசியதாவது:

"5 டெஸ்ட் போட்டிகள் என்பது எளிதானதல்ல, ஆனால் இந்த இந்திய அணி நல்ல அணி. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இந்த அணி அரிதான அயல்நாட்டு டெஸ்ட் வெற்றிக்கு அருகில் வந்தது. ஆனால் வெற்றி உருவாகும் வாய்ப்பை பற்றிக் கொண்டு அதனை அடைய முயல வேண்டும். 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் இந்திய அணி ஓரிரு டெஸ்ட்களில் வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

இதனைச் செய்தால் இந்த இளம் அணிக்கு தன்னம்பிக்கை வளரும். ஆனால் இங்கிலாந்து வீரர்களை இரு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்யும் பவுலிங் அவசியம். நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல இலங்கை அணி தோல்விக்கு அருகில் வந்ததை நாம் பார்த்தோம். துணைக்கண்ட அணிகள் அயல்நாட்டில் விளையாடும்போது இதுதான் பெரிய பிரச்சினை.

இங்கிலாந்தில் கோடைகாலம் வெப்பமாக இருந்தால் 4ஆம் நாள் 5ஆம் நாளில் பந்துகள் திரும்பும், அப்போது அஸ்வின், அல்லது ஜடேஜாவுக்கு நல்ல வாய்ப்பு. அங்கு இவர்கள் அதிகம் விளையாடவேண்டும் அப்போதுதான் அவர்கள் பந்து வீச்சில் அயல்நாட்டு மண்ணில் முன்னேற்றம் ஏற்படும்.

2002ஆம் ஆண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஹர்பஜன், அனில் கும்ளே இருவரும் விளையாடி தங்களிடையே 11 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

இங்கிலாந்தில் அவுட் ஃபீல்ட் வேகமாக இருக்கும். ஷாட் பிட்ச் பந்திற்காக பேட்ஸ்மென்கள் காத்திருப்பார்கள். ஆகவே பந்தை ஃபுல் லென்த்தில் வீசி ஸ்விங் செய்ய வேண்டும். ஷாட் பிட்ச் பந்துகள் அங்கு பவுண்டரிக்கு விரட்டப்படும்.

இந்த வகையில், ஜாகீர் கான் இல்லாதபோது இஷாந்த் சர்மா இந்திய வேகப்பந்து வீச்சைத் தலைமை தாங்கி நடத்த வேண்டும். அவரும் இப்போது அனுபவ பந்து வீச்சாளர்தான். இங்கிலாந்தில் அவருக்கு அனுபவம் உள்ளது. இப்போது அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் இங்கிலாந்துக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்க முடியும்.

இரண்டு பவுலர்கள் இங்கிலாந்தை வீழ்த்த உத்திகளை வகுத்தால் போதும். ஆனாலும் அது அவ்வளவு சுலபமல்ல”

என்கிறார் திராவிட்.

1959ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

தோனிக்கு இனி சோதனை காலம் ஆரம்பிக்கிறது. இங்கிலாந்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள். பிறகு 2015 உலகக் கோப்பை தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x