

டெர்ராசா: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான கிராஸ்-ஓவர் போட்டியில் 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி ‘பி’ பிரிவில் விளையாடியது.
முதல் சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தை சமனில் நிறைவு செய்தது. இருந்தும் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை இழந்தது. அதனால் சீனா மற்றும் இந்திய அணிகள் சமமான புள்ளிகளை பெற்றன. இருந்தும் கோல்களின் வித்தியாசத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் சுற்றில் மூன்றாவது இடம் பிடித்தது இந்தியன்.
அதன் பலனாக காலிறுதிக்கு முந்தைய சுற்றான கிராஸ்-ஓவரில் விளையாட தகுதி பெற்றது. இந்நிலையில், இந்த கிராஸ்-ஓவர் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக பலபரீட்சை செய்தது இந்தியா. முதல் மூன்று ரவுண்டில் இரு அணிகளும் கோல் ஏதும் பதிவு செய்யவில்லை. இருந்தும் கடைசி 15 நிமிடங்களில் ஸ்பெயின் அணி அதிரடியாக ஒரே ஒரு கோல் பதிவு செய்தது. அதன் மூலம் அந்த அணி காலிறுதிக்கு இப்போது தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி 9 முதல் 16-வது இடத்திற்கான கிளாசிபிகேஷன் போட்டியில் கனடாவை எதிர்த்து விளையாடுகிறது.