IND vs ENG | சூர்யகுமாரின் அபார சதம் வீண்: இங்கிலாந்து வெற்றி

IND vs ENG | சூர்யகுமாரின் அபார சதம் வீண்: இங்கிலாந்து வெற்றி

Published on

நாட்டிங்கம்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இன்று (ஜூலை 10) நாட்டிங்கம் பகுதியில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 215 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் ஆடும் லெவனில் நான்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இந்திய அணி 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களத்திற்கு வந்தார் சூர்யகுமார் யாதவ். அடுத்த சில பந்துகளில் கேப்டன் ரோகித் தனது விக்கெட்டை இழந்தார். இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் உடன் 62 பந்துகளில் 119 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் சூர்யகுமார் யாதவ். 16-வது ஓவரில் ஷ்ரேயஸ் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இருந்தும் அடுத்த ஓவரில் சதம் பதிவு செய்தார் சூர்யகுமார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதமாகும். எதிர்முனையில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அதனால் அழுத்தம் முழுவதும் சூர்யகுமார் மீது இருந்தது. 19-வது ஓவரில் அவுட்டானார் அவர். 55 பந்துகளில் 117 ரன்களை விளாசி இருந்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 198 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தும் இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லே, தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரும் வென்றிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in