

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் துனிசியாவைச் சேர்ந்த உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா எதிர்கொண்டார். தரவரிசையில் 17வது இடம் வகிப்பவர் எலினா ரைபகினா.
இருவருக்குமே கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இது முதல் ஆட்டம் ஆகும். இதனால் ஆட்டம் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்தது. முதல்செட்டில், ஓன்ஸ் ஜபியூர் கையே ஓங்கி இருந்தது. அவர் 3-6 என்ற கணக்கில் முதல்செட்டை கைப்பற்றினார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் கம்பேக் கொடுத்த எலினா ரைபாகினா, ஜபியூரை திறைமையாக எதிர்கொண்டார்.
அவரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் அடுத்த சுற்றுகளை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் எலினா. இந்த வெற்றி மூலம் பல சாதனைகளை தகர்த்துள்ளார் அவர். குறிப்பாக, வரலாற்றில் இது முதல்முறை. ஆம், கஜகஸ்தான் நாட்டில் இருந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் முதல் டென்னிஸ் வீரர் இவர் மட்டுமே. 23 வயதே ஆகும் எலினா, 2011க்கு பிறகு பட்டம்பெற்ற இளம்வயது சாம்பியனும்கூட. 2011ல் பெட்ரா க்விட்டோவா இளம்வயதில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
அதேபோல், ஓன்ஸ் ஜபியூர் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பெற்றுஇருந்தார். அவரின் தொடர் வெற்றிக்கும் சாம்பியன் பட்டம் வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எலினா. இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.