

பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியின் கேப்டன் வேலன்சியாவுக்கு ரெட்கார்டு கொடுத்த நடுவரின் முடிவு தவறானது. அதனால்தான் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது என ஈகுவடார் பயிற்சியாளர் ரெய்னால்டோ ரூடா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வேலன்சியாவுக்கு ரெட்கார்டு கொடுத்த நடுவர், பிரான்ஸ் வீரர் மமாடு சாக்கோ, எங்கள் வீரர் ஆஸ்வால்டோ மின்டோ மீது முழங்கையால் இடித்தது அப்பட்டமாக தெரிந்தும்கூட அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். வேலன்சியாவுக்கு ரெட் கார்டு கொடுத்தது அவமானத்துக்குரியது. எனினும் அதை ஏற்றுதான் ஆக வேண்டும். நடுவரின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன். நடந்தது நடந்ததுதான். அதற்காக இனி எதுவும் செய்ய முடியாது.
நடுவர்களின் செயல்பாடு குறித்து ஃபிபா கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும். நடுவர்களின் பெரும்பாலான முடிவுகள் திருப்திகரமாக இல்லை. முக்கியமான நேரத்தில் நாங்கள் எங்களின் முக்கியமான வீரரை (வேலன்சியா) இழந்தோம். 10 வீரர்களுடன் விளையாடி டிரா செய்வது கடினம். எனினும் போராடி டிரா செய்த எங்கள் வீரர்களுக்கு நன்றி” என்றார்.