

ஆம்ஸ்டெல்வீன்: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் முதல் கோலை பதிவு செய்ததும் தனது காதலனிடம் காதலை தெரிவித்துள்ளார் சிலி நாட்டை சேர்ந்த வீராங்கனை பிரான்சிஸ்கா தலா (Francisca Tala).
15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் முதல் சுற்றில் சிலி அணி ‘ஏ’ பிரிவில் விளையாடியது. அந்த அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் போட்டியான கிராஸ்-ஓவரில் பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்துள்ளார் 26 வயதான சில வீராங்கனை பிரான்சிஸ்கா தலா. காதல் மிகவும் கவித்துவமானது என்பார்கள். அது தான் இங்கு வெளிப்பட்டுள்ளது. களத்திற்கு வெளியே இருந்த காதலனை அழைத்து, அவருக்கு முன்னர் மண்டியிட்டு கவித்துவமாக காதலை வெளிப்படுத்தினார் தலா. அதனை அவரது காதலர் ஏற்றுக் கொண்டுள்ளதாக போட்டி முடிந்ததும் பேட்டியில் தெரிவித்துள்ளார் தலா.
"நான் எங்கள் அணி வீராங்கனைகளுடன் ஒரு பந்தயம் போட்டேன். நெதர்லாந்து அணிக்கு எதிரான நான் கோல் பதிவு செய்தால் எனது பாய் பிரெண்டை கரம் பிடிப்பேன் என சொல்லி இருந்தேன். அதைத்தான் செய்தேன்" என தெரிவித்துள்ளார் அவர்.
இதே போல டோக்கியோ ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையிடம் தனது காதலை சொல்லி சம்மதம் பெற்றிருந்தார் அந்த வீராங்கனையின் பயிற்சியாளர்.