Published : 08 Jul 2022 03:43 PM
Last Updated : 08 Jul 2022 03:43 PM

“இப்போது பலரும் ஓய்வெடுப்பது போல் அல்லாமல் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினேன்” - கங்குலி ஷேரிங்

கொல்கத்தா: "13 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினேன். இப்போது நிறைய வீரர்கள் ஓய்வெடுப்பது போல் நான் ஓய்வு எடுக்கவில்லை" என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை மேட்ச் ஃபிக்சிங் சர்ச்சை ஆட்கொண்டிருந்த நிலையில், அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் கங்குலி. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். அவரது தலைமையிலான அணி 2003-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. பல திறமையான வீரர்கள் அவரது தலைமையின் கீழ் அறிமுகமாகி விளையாடி இருந்தனர். இந்திய அணி இப்போது அச்சமின்றி விளையாடி வரும் கிரிக்கெட்டுக்கு வித்திட்டவர் அவர்.

இருந்தும் 2005 வாக்கில் அவர் பின்னடைவை சந்திக்க தொடங்கினார். குறிப்பாக பயிற்சியாளருக்கும், அவருக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது. பின்னர் அணியில் விளையாடும் வாய்ப்பின்றி சுமார் ஆறு மாத காலம் வெளியில் இருந்தார். இப்போது அது குறித்து நினைவுகூர்ந்துள்ளார் கங்குலி.

"டொமஸ்டிக் கிரிக்கெட் விளையாடுவது கடினமானதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அப்போதைய சூழல் எனக்கு கடினமாக இருந்தது. ஏனென்றால் இது பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு அப்பாற்பட்டது.

என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 13 ஆண்டு காலம் ஓய்வின்றி அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அதற்கு முன்னர் ஒரே ஒரு தொடரை கூட நான் மிஸ் செய்தது கிடையாது. இப்போது நிறைய வீரர்கள் ஓய்வு எடுப்பது போல் நான் ஓய்வு எடுக்கவில்லை. அதனால் நான் விளையாடாமல் இருந்த அந்த 4 முதல் 7 மாத காலத்தை என்னுடைய 17 ஆண்டு கால கிரிக்கெட் கரியரில் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் எடுத்துக்கொண்ட ஓய்வாக அதை பார்க்கிறேன்.

அப்போது நான் கடுமையான விரக்தியில் இருந்தேன். அதே நேரத்தில் எனக்குள் கிரிக்கெட் இருக்கிறது என நம்பினேன். அதன் காரணமாக எனக்கு நானே நான் யார் என நிரூபித்துக் கொள்ள வேண்டுமென முடிவுக்கு வந்தேன். அதை செய்தேன்" என கங்குலி தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன் பொறுப்பை இழந்தார் கங்குலி. பின்னர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். பல மாதங்களுக்கு பிறகு அணியில் கம்பேக்கை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் கங்குலி. அதன் மூலம் 18,575 ரன்கள் சேர்த்துள்ளார் அவர். இதில் 107 அரை சதம் மற்றும் 38 சதங்கள் அடங்கும். அவர் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்துகள் கங்குலி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x