

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 138 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வி தழுவிய புனே அணியின் கேப்டன் தோனி தோல்வி குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்தியும் புனே அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்தத் தோல்வியினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடும் பிரச்சினையாகியுள்ளது. ஏறக்குறைய வாய்ப்பு கை நழுவிவிட்ட நிலைதான்.
தோல்வி பற்றி தோனி கூறும்போது, “நெருக்கமான போட்டிகளில் தோல்வி அடைவதை ஜீரணிக்க முடியவில்லை. சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.
வெற்றி பெற்ற 3 போட்டிகளிலும் சவுகரியமாகவே வென்றோம், ஆனால் தோற்ற போட்டிகள் கடைசி ஓவர் வரை வந்து தோல்வியடைவதாக உள்ளது. புதிய பந்தில் நன்றாக வீசினோம், சன் ரைசர்ஸ் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்டோம். எங்கள் பந்து வீச்சை அவர்கள் பந்து வீச்சுடன் ஒப்பிட்டால், அவர்கள் சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும்.
தொடக்கத்திலேயே உத்வேகத்தை இழந்து விட்டோம், விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்தன. ஆடம் ஸாம்பா அபாரம். அவரை முதலிலிருந்தே 11 வீரர்கள் அணிக்குள் கொண்டு வர விரும்பினோம். ஆனால் அப்போது அணிச்சேர்க்கை கடினமாக இருந்தது.
முதல் 3 போட்டிகளில் எங்களது சிறந்த 11 வீரர்களுடன் ஆடினோம். ஸாம்ப்பா ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. அவர் அணிக்கு நிலைத்தன்மையை அளிக்கிறார். இந்த ஒரு போட்டியில்தான் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தோம்” என்றார்.