நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மக்களின் வாட்டத்தைப் போக்கும் கிரிக்கெட்!

நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மக்களின் வாட்டத்தைப் போக்கும் கிரிக்கெட்!
Updated on
3 min read

தீவு தேசமான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், மருந்து, மாத்திரை என உயிர் வாழத் தேவைப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கு அந்நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனுதினமும் நிம்மதியின்றி தவித்து வரும் அந்த நாட்டு மக்களை சற்றே இளைப்பாற செய்துள்ளது கிரிக்கெட் விளையாட்டு.

அதுவும் புண்பட்ட அந்த மக்களின் நெஞ்சில் கொஞ்சமாக புன்னகையைப் பூக்க செய்துள்ளது இக்குழு விளையாட்டு. நிலையில்லா இந்த வாழ்க்கையில் நித்தமும் கவலை கொண்டிருந்த அந்த மக்களின் நெஞ்சத்தில் நெருக்கடியை கடந்து செல்வோம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது கிரிக்கெட்.

இப்படியாக அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவுகளில் இருந்து விடுபட இலங்கை மக்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு அருமருந்தாக அமைந்துள்ளது. அது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அந்த நாட்டில் ஆட்சியும், ஆட்சியாளர்களும் மாறி உள்ளனர். ஆனாலும் நாட்டின் காட்சி மட்டும் மாறவில்லை. நெருக்கடியின் நெருக்குதலால் அதிவிரைவில் பணத்தை அச்சிடும் பணியை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது இலங்கை அரசு.

இலங்கையும் கிரிக்கெட்டும்!

இலங்கையின் தேசிய விளையாட்டாக பீச் வாலிபால்தான் உள்ளது. இருந்தும் அங்கு கிரிக்கெட் விளையாட்டுதான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட இந்தியாவை போலவே பெரிய ரசிகர் பட்டாளத்தை அந்த நாடு கொண்டுள்ளது. இலங்கை அதன் விடுதலைக்கு முன்னதாக சிலோன் என 1926-27 வாக்கில் முதல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடியது. கடந்த 1981-இல் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. 1990-களின் தொடக்கத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் வெற்றிகளை பெற்றது இலங்கை கிரிக்கெட் அணி.

அதுவரை Underdog-ஆக அறியப்பட்ட அந்த அணி விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. அதன் அடையாளமாக 1996-இல் ஆசிய கண்டத்தில் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்) நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதன் பிறகு இலங்கை களத்தில் இறங்கினால் மரண அடிதான் என எதிரணி எண்ணும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியது.

2002 சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டம் (இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது), 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டியில் விளையாடியது, 2009 மற்றும் 2012 டி20 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம், 2014 டி20 உலகக் கோப்பை சாம்பியன் என பல்வேறு சாதனைகளை இலங்கை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணியாகவும் இலங்கை உள்ளது.

அர்ஜுனா ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்கக்கரா, தில்ஷன், அட்டப்பட்டு, மலிங்கா என பல நம்பிக்கை நாயகர்களை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது அந்த அணி.

இப்படியாக இலங்கையின் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டு. அதன் வெளிப்பாடு தான் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு தேநீர் மற்றும் பன் கொடுத்து உபசரித்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஷன் மஹாநமா.

இத்தகைய சூழலில்தான் அந்த நாட்டில் கிரிக்கெட் தொடரை நடத்த ஆயத்தமானது இலங்கை கிரிக்கெட் வாரியம். அதுவும் கிரிக்கெட் உலகில் சாம்பியன் அணிகளில் ஒன்றாக திகழும் ஆஸ்திரேலியாவை இந்த தொடருக்காக அழைத்திருந்தது. 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் என நீண்ட நெடும் சுற்றுப்பயணம் இது. நெருக்கடிக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி இலங்கையில் லேண்ட் ஆனது. டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது, ஒருநாள் தொடரை இலங்கை வென்றது. இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கம்மின்ஸ் பதிவு: "மின்தடை சீரானதும் இரவு உணவை தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம். இலங்கை ஒரு இந்த அசாதாரண காலத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்கள் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். இந்த மண்ணில் இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என கடந்த ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ்.

தங்கள் நாடு நெருக்கடியில் இருப்பதை அறிந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கை வந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் தங்களது ஆதரவை தனித்துவமான வகையில் செய்திருந்தனர் இலங்கை ரசிகர்கள். இலங்கை மண்ணில் அந்த அணி விளையாடிய போட்டி ஒன்றில் மைதானத்தின் பார்வையாளர் மாடம் முழுவதும் ஆஸ்திரேலியாவின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்த தலைகளாக காட்சி அளித்தது. அது இலங்கை மக்கள் கிரிக்கெட் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். அதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

நெருக்கடி சூழலில் கிரிக்கெட் தொடரின் தாக்கம் குறித்து மக்கள் சொல்வது என்ன?

"ஆம், இப்போது எங்கள் நாடு எதிர்கொண்டு வரும் நெருக்கடி வரலாறு காணாத ஒன்று. மக்கள் தங்களது செல்வங்களை கரைத்து ஆதரவற்றவர்களாக நிற்கின்றனர். சலிப்பு தரும் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறோம். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நாட்கணக்கில் நின்று வருகிறோம்.

குழந்தைகளும் மகிழ்வின்றி வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளின் தேவைகளை கூட எங்களால் வழங்க முடியவில்லை. இத்தகைய சூழலில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது ஏதோ இந்த சிக்கல்களில் இருந்தெல்லாம் சற்று விலகி ஒருவிதமான புத்துணர்வு மனதிற்கு கிடைக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டை நாங்கள் விரும்புகிறோம். இருந்தாலும் இப்போது எங்களுக்கு இருக்கும் சிக்கல்களுக்கு மத்தியில் முழு நேரத்தையும் கிரிக்கெட் உடன் எங்களால் செலவிட முடியவில்லை" என தெரிவித்துள்ளார் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை தனது 10 வயது மகனுடன் பார்த்த உஜ்ஜித் நிலந்தா.

தனது மகனை கிரிக்கெட் வீரனாக உருவாக்க வேண்டுமென விரும்பியுள்ளார் உஜ்ஜித். இருந்தும் பொருளாதார நெருக்கடி காரணமாக இப்போது அந்த திட்டத்தை அவர் கைவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in