Published : 12 May 2016 04:25 PM
Last Updated : 12 May 2016 04:25 PM

பிரபல வர்ணனையாளர் டோனி கோசியர் காலமானார்: கிரிக்கெட் உலகம் அஞ்சலி

கிரிக்கெட் உலகின் மதிப்பு மிக்க வர்ணனையாளர்களில் ஒருவரான மே.இ.தீவுகளின் டோனி கோசியர் புதன்கிழமையன்று காலாமனார். அவருக்கு வயது 75.

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் புதனன்று உயிரிழந்தார். 1962-ம் ஆண்டு முதல் மே.இ.தீவுகளின் அனைத்துக் கிரிக்கெட்டுடனும் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டவர் டோனி கோசியர். வானொலி கிரிக்கெட் வர்ணனையில் மிகவும் பிரபலமான இவர் கிரிக்கெட் நுட்பங்களைத் துல்லியமாக வர்ணிக்கக் கூடியவர்.

1970-80களின் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டோனி கோசியர் மிகவும் பிரபலமானவர். இவரது வர்ணனையைக் கேட்டதன் மூலமே தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில் சுனில் கவாஸ்கர் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் என்பது கிரிக்கெட் உலகில் தெரியவந்தது என்றால் அது மிகையல்ல. மேற்கிந்திய கிரிக்கெட்டின் தொடக்ககால பெருமைகளில் டோனி கோசியரின் பங்களிப்பும் அபரிமிதமானது. இவரது வர்ணனை மற்றும் எழுத்துக்கள் மூலமே விவ் ரிச்சர்ட்ஸின் அதிரடி பேட்டிங் உலக ரசிகர்களிடத்தில் பரவியது.

ஒரு முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது சச்சின் டெண்டுல்கர் (169) அசாருதீன் அதிரடி சதங்களை வர்ணித்த போது ‘என் வாழ்நாளில் இத்தகைய ஒரு டெஸ்ட் ஜோடி ரன் குவிப்பை கண்டதில்லை’ என்றார். ஒரு முனையில் ஆலன் டோனல்டை சச்சின் கவனிக்க மறுமுனையில் குளூஸ்னரை நன்றாகக் ‘கவனித்தார்’ அசாருதீன். இவ்வாறு அரிய இன்னிங்ஸ்களைக் கண்டறிந்து அது பற்றிய விவரங்களை நுணுக்கமாகப் பதிவு செய்தவர் டோனி கோசியர். மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜி.ஆர்.விஸ்வநாத் சென்னையில் அடித்த 97 ரன்கள் பற்றியும் டோனி கோசியர் விதந்தோதிய காலங்கள் உண்டு.

கிரிக்கெட் உலகம் இவரை ஒரு மரியாதைக்குரிய வர்ணனையாளராகவும் எழுத்தாளராகவும் வரலாற்றாளராகவும் மதித்து வருகிறது. இவரது மறைவு குறித்து கிரிக்கெட் உலகம் இவருக்கு புகழாஞ்சலிகளை வெளியிட்டு வருகிறது

மைக்கேல் ஹோல்டிங், இவரது ‘விஸ்பரிங் டெத்’ என்ற சுயசரிதை நூலை டோனி கோசியரும் சேர்ந்தே எழுதினார். ஹோல்டிங் கூறும்போது, “இது கிரிக்கெட்டுக்கு மிகவும் துக்ககரமான நாள். மே.இ.தீவுகளின் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டோனி கோசியரின் குடும்பத்தினருக்கும் இது வருத்தம் தோய்ந்த நாள்” என்றார்.

நடப்பு மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ தனது ட்விட்டரில், “ கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு சோகமான தினம். குறிப்பாக மே.இ.தீவுகள் கிரிக்கெட்டுக்கு! ரசிகர்களுக்கு! உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் உங்களை மறக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறும்போது, “டோனி கோசியர் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வர்ணனை அறையில் மிகச்சிறந்தவராக விளங்கினார். நல்ல நண்பர்” என்றார்.

விரேந்திர சேவாக் கூறும் போது, “ஒலி அலையில் அவர் குரல் ஒரு ஷாம்பெய்ன்” என்று கூறியுள்ளார்.

மேற்கிந்திய அணி 1965-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது தனது வர்ணனைப் பயணத்தை தொடங்கினார் டோனி கோசியர்.

1940-ம் ஆண்டில் பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் பிறந்தார் டோனி. தனது தந்தை ஜிம்மியுடன் வானொலி வர்ணனையைத் தொடங்கினார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர், டோனி கோசியர் பற்றி கூறும்போது, “உலக கிரிக்கெட் ஊடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் டோனி கோசியர், அவரது மறைவு என்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இரங்கலில் கூறும்போது, “எனக்கு முந்தைய தலைமுறைகளைப் போலவே நானும் டோனி கோசியர் வர்ணனைகளைக் கேட்டுள்ளேன் என்பதே எனக்கு பெருமை அளிக்கிறது. அவரது மேற்கிந்திய பாணி ஆங்கிலம், துல்லியமான பார்வை, கிரிக்கெட் வர்ணனையில் தனது வார்த்தைப் பிரயோகத்தினால் வண்ணம் சேர்த்தவர்.

அதே போல் கிரிக்கெட்டின் நிறத்தை மாற்றிய கெரி பேக்கரின் உலக தொடர் கிரிக்கெட்டிற்கும் டோனி கோசியர் தனது வர்ணனைப் பங்களிப்புகளை செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

கிளைவ் லாய்ட் கூறும்போது, “70களிலும் 80களிலும் எங்கள் கிரிக்கெட் ஆட்டத்தை டோனி கோசியரின் கண்களாலும் வார்த்தைகளாலுமே ரசிகர்கள் கண்டு களித்தனர். அவரது குரல், அவரது பேனா மூலமே எங்கள் கிரிக்கெட் புகழ் பரவியது” என்றார்.

மேற்கிந்திய கிரிக்கெட் குறித்து The West Indies: 50 Years of Test Cricket என்ற அருமையான புத்தகத்தையும் எழுதினார் டோனி கோசியர்.

2003-ம் ஆண்டே விஸ்டன் கிரிக்கெட் இவரைப் பற்றி கூறும்போது, 40 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 266 டெஸ்ட் போட்டிகளை அவர் கண்டு வர்ணனையளித்துள்ளார் என்று எழுதியுள்ளது.

பெரிய மட்டத்தில் கிரிக்கெட் ஆடவில்லையென்றாலும் பார்படாஸ் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்துள்ளார்.

டோனி கோசியரை மைக்கேல் ஹோல்டிங்குக்கு அறிமுகம் செய்து வைத்த மாரிஸ் ஃபாஸ்ட்ர் ஹோல்டிங்கிடம் அப்போது கூறியபோது, “இவர் (கோசியர்) உன்னைப்பற்றி, உன் கிரிக்கெட் திறன் பற்றி நன்றாக எழுதினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நீ விளையாடுவது நிச்சயம்” என்றாராம்.

இதுதான் டோனி கோசியர் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டில் செலுத்திய செல்வாக்கு. ஒரு அருமையான கிரிக்கெட் வர்ணனையாளர், ரசிகர், எழுத்தாளர், நுணுக்கப் பதிவாளரை கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x