Published : 27 May 2016 10:56 AM
Last Updated : 27 May 2016 10:56 AM

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நடாலுக்கு 200-வது வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆட வர் பிரிவு 3-வது சுற்றில் ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது அவருக்கு 200-வது வெற்றியாக அமைந்தது.

பாரிஸில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் பாக்னிஸை தோற்கடித்தார்.

நடாலுக்கு இது கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 200-வது வெற்றியாக அமைந்தது. 200 வெற்றிகளை குவிக்கும் 8-வது வீரர் நடால் ஆவார். இந்த வகையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 302 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். நடால் தனது 3-வது சுற்றில் ஸ்பெயினின் கிரானோலர்ஸ் அல்லது பிரான்சின் நிக்கோலஸ் மகுட்டை எதிர்கொள்வார்.

நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 91-வது இடத்தில் உள்ள ஜப்பானின் குருமி நராவை தோற்கடித்தார்.

8-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் டிமியா பாஸின்ஸ்கி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 47-ம் நிலை வீராங்கனையான கனடாவின் யுஜினி பவுச்சார்டை வீழ்த்தினார்.

பயஸ் ஜோடி வெற்றி

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கொலம்பியாவின் ராபர்ட் பராஹ், ஜெர்மனியின் அனா லினா ஜோடியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் பயஸ்- ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் புரவ் ராஜா, குரோஷியாவின் இவா ஹார்லோவிச் ஜோடி 1-6, 2-6 என்ற நேர் செட்டில் போலந்தின் லூக்காஸ் ஹூபோட், ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பெயா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x