

லண்டன்: விம்பிள்டன் அரங்கில் பாரம்பரிய வழக்கமாக வீரர்கள் வெள்ளை நிறத்திலான ஆடை அணிவது வழக்கம். இப்போது அதனை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ். அத்துடன், அது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன்படி தலை முதல் காலணி வரை வீரர்களும், வீராங்கனைகளும் தாங்கள் அணியும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் (ஸ்போர்ட்ஸ் பேண்ட் போன்றவை) என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இது விம்பிள்டனின் 145 ஆண்டு கால மரபு. அண்மையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி இருந்தார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், விம்பிள்டன் தொடரின் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ். அவர் சிகப்பு நிறத்தில் தொப்பி மற்றும் சிகப்பு நிற ஷூவை அணிந்திருந்தார். இருந்தாலும் இதனை ஆட்டத்தில் விளையாடியபோது செய்யாமல், ஆட்டம் முடிந்த பிறகு அவர் கோர்ட்டுக்குள் பேட்டி கொடுத்தபோதுதான் செய்திருந்தார். களத்தில் விளையாடியபோது அவர் வெள்ளை நிற ஷூ தான் அணிந்திருந்தார். இந்த சம்பவம் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது.
என்ன சொல்கிறது விதி? - போட்டியாளர்கள் முழுவதும் வெள்ளை நிறத்திலான ஆடையை மட்டுமே அணிய வேண்டும். இது வீரர்கள் கோர்ட்டுக்குள் நுழையும் தருணத்திலிருந்து பொருந்தும். அதில் வண்ணங்கள் ஏதும் இருக்கக்கூடாது என விம்பிள்டனில் வீரர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு விதி சொல்கிறது.
27 வயதான நிக் கிர்கியோஸ், உலக டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னர் அவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனில் (2014) காலிறுதி வரை முன்னேறி உள்ளார். அதுதான் அவரது உச்சபட்ச சாதனையாக உள்ளது. இப்போது இரண்டாவது முறையாக விம்பிள்டனில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 2022 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் அவர்.
"நான் விரும்பியதை செய்தேன். அவ்வளவு தான். நான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. எனக்கு ஜோர்டான்ஸ் காலணி அணிய பிடிக்கும். அதனால் அதை செய்தேன். நாளை வெள்ளை நிறத்திலான டிரிபிள் ஒயிட் கொண்டதை அணிகிறேன்" என கோர்ட்டுக்குள் பேட்டி கொடுத்தபோது சொல்லி இருந்தார் அவர்.
முன்னதாக, நடப்பு தொடரில் அவருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. முதல் சுற்றில் வெற்றிக்கு பிறகு ரசிகரை நோக்கி எச்சில் துப்பியது மற்றும் மூன்றாவது சுற்றில் சிட்சிபாஸுடன் வெடித்த சர்ச்சை போன்ற காரணத்திற்காக அவருக்கு 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது இந்த செயலுக்கு என்ன அபராதம் விதிக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், அவர் நாளை சிலி வீரரை எதிர்கொள்கிறார். நடப்பு விம்பிள்டனில் அவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் டார்க் ஹார்ஸ் போல விளையாடி வருகிறார்.