ஐதராபாத்துடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா மும்பை

ஐதராபாத்துடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா மும்பை
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. மும்பை அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றியும், ஐதராபாத் 8 ஆட்டத்தில் 5 வெற்றியும் பெற்றுள்ளது.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட மும்பை அணி கடைசியாக மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்தது. ஐதராபாத் வலுவான குஜராத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 18-ல் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

இரு அணிகளுமே பேட்டிங்கில் வலுவானவைதான். ஐதராபாத் கேப்டன் வார்னர் இந்த தொடரில் 410 ரன்களும், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 383 ரன்களும் குவித்துள்ளனர். ரோஹித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும் அம்பாட்டி ராயுடு, பார்த்திவ் படேல் கை கொடுக்கின்றனர்.

அதேபோல் ஐதராபாத் அணி யில் ஷிகர் தவண், ஹென்ரிக்ஸ் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். யுவராஜ் சிங்கும் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரை இரு அணியுமே வேகங்களையே நம்பி உள்ளது. மும்பை அணியில் மெக்லினஹன் 13 விக்கெட்களும், ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 12 விக்கெட்களும் இந்த தொடரில் கைப்பற்றியுள்ளனர்.

மும்பை அணிக்கு ஜஸ்பிரிட் பும்ரா, டிம் சவுத்தி ஆகியோரும் ஐதராபாத் அணிக்கு முஸ்தாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரும் வலு சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்தில் ஐதராபாத் அணியைக் காட்டிலும் மும்பையே சற்று வலுவுடன் உள்ளது.

கொல்கத்தா-குஜராத்

இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாற்றத்துடன் உள்ளது.

பிரண்டன் மெக்கலம், ஆரோன் பின்ச், டிவைன் ஸ்மித் ஆகியோரை நம்பியே பேட்டிங் அமைந்துள்ளது பலவீனமாக உள்ளது. ரெய்னா, தினேஷ் கார்த்திக், டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் பட்சத்தில் வெற்றிக்கு வழிகாணலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in