

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த முறை முதல் சுற்றோடு வெளியேறிய நடால், இப்போது முதல் தடையைத் தாண்டியிருக்கிறார்.
அவர் தனது முதல் சுற்றில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸானை தோற்கடித்தார். இதன்மூலம் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டியில் 700-வது வெற்றியைப் பதிவு செய்தார் நடால். சர்வதேச அளவில் இந்த சாதனையை எட்டிய 11-வது வீரர் நடால் ஆவார்.
2-வது சுற்றில் செக்.குடியரசின் லூகாஸ் ரோஸலை சந்திக்கிறார் நடால். 2012 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இதே லூகாஸை சந்தித்த நடால், அவரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
லூகாஸுடனான 2-வது சுற்று குறித்துப் பேசிய நடால், “லூகாஸ் மிகவும் அபாயகரமான வீரர். ஆற்றல் மிக்க ஷாட்களை அடிக்கக்கூடியவர். அவரை வீழ்த்த வேண்டும் என்றால் மிகச்சிறப்பாக ஆட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தனது முதல் சுற்றில் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாவ்லோ லோரன்ஸியைத் தோற்கடித்தார். இதுவரை 13 முறை ஃபெடரருடன் மோதியுள்ள லோரன்ஸி, அவையனைத்திலும் தோல்வி கண்டுள்ளார்.