

எட்ஜ்பாஸ்டன்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 378 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக புஜாரா மற்றும் பந்த் அரை சதம் விளாசி இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் சமனில் முடிந்தாலோ இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலை காரணமாக இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை வெற்றிக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் லூஸ் ஷாட் ஆடி விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்யப்பட்ட ரன்களாக இருப்பது 283 ரன்கள். அதனை தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிராக சேஸ் செய்திருந்தது. இங்கிலாந்து அணி அதிகபட்சம் 211 ரன்களை மட்டுமே இந்த மைதானத்தில் சேஸ் செய்துள்ளது. அதனால் இந்தப் போட்டி இந்தியாவுக்கு சாதகமாகவோ அல்லது போட்டி சமனில் முடியவோ அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி இலக்கை விரட்ட ஆர்வமாக இருப்பதாக டாஸ் வென்றதும் பவுலிங் தேர்வு செய்த போது சொல்லி இருந்தார். அதற்கு ஏற்றார் போல இதற்கு முந்தைய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணி இலக்கை வெற்றிகரமாக விரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வலுவான பவுலிங் லைன் அப்புக்கு எதிராக அதனை இங்கிலாந்து செய்கிறதா என்பதை பார்ப்போம். இப்போது இங்கிலாந்து இலக்கை விரட்டி வருகிறது.