IND vs ENG | கோலியுடன் களத்தில் நடந்தது என்ன? -  ஜானி பேர்ஸ்டோ அளித்த பதில்

IND vs ENG | கோலியுடன் களத்தில் நடந்தது என்ன? -  ஜானி பேர்ஸ்டோ அளித்த பதில்
Updated on
1 min read

எட்ஜ்பாஸ்டன்: தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் பேர்ஸ்டோவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பேர்ஸ்டோவிடம் கோலி வார்த்தைப் போரில் (ஸ்லெட்ஜ்) ஈடுபட்டு இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் சமனில் முடிந்தாலோ இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 257 ரன்கள் முன்னிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பேட் செய்த போது அந்த அணி வீரர் பேர்ஸ்டோவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை கோலி ஸ்லெட்ஜ் செய்த காரணத்தால் இருவரும் முட்டிக் கொண்டனர். இருந்தும் அடுத்த சில பந்துகளில் இருவரும் பரஸ்பரம் புன்னகையை பகிர்ந்து கொண்டனர். ஆனாலும், களத்திற்கு வெளியே இது விவாதப் பொருளானது. அப்போது 61 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார் பேர்ஸ்டோ. அதன் பிறகு 79 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் அவர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் பேர்ஸ்டோ. கோலியுடன் களத்தில் நடந்தது என்ன என அப்போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

"நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வருகிறோம். களத்தில் நாங்கள் கடுமையாக போட்டியிடுகிறோம். இதுவும் அந்த வகையிலான போட்டி தான். நாங்கள் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட். இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் எங்களது நோக்கம். இருவருக்குமே அவரவர் சார்ந்த அணியினை வெற்றிக் கோட்டை கடக்க செய்ய வேண்டுமென்பது தான் விருப்பம். இதெல்லாம் அதன் ஒரு பகுதி. இது அந்த ஆட்டத்துடன் மூட்டை கட்டி வைக்கப்படும்" என தெரிவித்துள்ளார் பேர்ஸ்டோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in