

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் மூட்டு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வைத்தியர் மரத்தடியில் அமர்ந்து சிகிச்சை கொடுப்பது வழக்கமாம்.
முன்னதாக தோனியின் பெற்றோர்கள் அந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு அந்த சிகிச்சையில் பலன் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த வைத்தியரை தோனி சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது தந்து இரண்டு மூட்டுகளிலும் வலி இருப்பதாக சொல்லி 40 ரூபாய் கொடுத்து ஒரு டோஸ் மருந்து வாங்கி உள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஆயுர்வேத வைத்தியரின் பெயர் வந்தன் சிங் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவர் மிகவும் பிரபலமாம். பல்வேறு மூலிகைகளை பாலில் கலந்து, தனது நோயாளிகளிடம் அவர் கொடுப்பாராம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தோனி தன்னிடம் மருந்து வாங்கி சாப்பிட்டதாகவும், அடுத்த முறை அவர் மீண்டும் எப்போது வருவார் என தனக்கு தெரியவில்லை எனவும் அவர் சொல்லியுள்ளார்.
முதலில் அவர் தோனியை அடையாளம் காணவில்லை என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் அவரை படம் பிடிக்க முயன்ற போது தான் தோனி என அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார் வைத்தியர் வந்தன் சிங். தோனி எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.