

எட்ஜ்பாஸ்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிராட் வீசிய பந்தில் புஜாரா அவுட் என அறிவித்தார் நடுவர். அதன் DRS ரிவ்யூ மூலம் மறுபரிசீலனை செய்து முடிவை நாட்-அவுட் என மாற்றினார் புஜாரா.
இங்கிலாந்து நாட்டில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் காரணமாக இந்தியா பேட் செய்து வருகிறது. புஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார்.
பின்னர் வந்த விஹாரியுடன் மிகவும் எச்சரிக்கையாக விளையாடினார் புஜாரா. முதல் இன்னிங்ஸின் 14-வது ஓவரை பிராட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை புஜாரா எதிர்கொண்டார். அந்தப் பந்து புஜாராவின் பேட் மற்றும் பேடுக்கு இடையே பயணித்து கீப்பர் பில்லிங்ஸ் வசம் தஞ்சம் அடைந்தது. அதைப் பார்க்க இன்சைட் எட்ஜ் ஆனது போல இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சத்தமும் கேட்டது. இங்கிலாந்து அணி வீரர்கள் ‘அவுட்’ என அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார்.
அப்போது, சிறிதும் தாமதிக்காமல் புஜாரா அதனை ரிவ்யூ செய்தார். அதில் பந்து அவரது பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. அதே நேரத்தில் மூன்றாவது நடுவர் LBW ரிவ்யூவும் செய்திருந்தார். அதிலும் அவர் தப்ப, அவுட் இல்லை என சொல்லப்பட்டது. இருந்தும் ஆண்டர்சன் வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் புஜாரா அவுட்டானார். 46 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர்.
முதல் நாள் உணவு நேர முடிவில் இந்திய அணி 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கோலி மற்றும் விஹாரி தற்போது களத்தில் உள்ளனர்.