

லண்டன்: இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஷார்டர் ஃபார்மெட் கேப்டன் இயன் மோர்கன். இவரின் ஓய்வை அடுத்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்துவந்த பட்லர், மோர்கன் இல்லாத சமயங்களில் 14 முறையை அணியை வழிநடத்தியுள்ளார். இம்முறை முழுநேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பை பட்லர் ஏற்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
31 வயதான பட்லர் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அதிரடியாக விளையாட கூடியவர். கடந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை தகுதிபெற அவரின் அதிரடியும் ஒரு காரணமாக அமைந்தது. இங்கிலாந்துக்காக 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பட்லர், 41.20 சராசரி உடன் 10 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் உட்பட 4,120 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 88 போட்டிகளில் 34.51 சராசரியுடன் 2,140 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சதமும் அடக்கம்.
மூன்று பார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் மூவர். டேவிட் மாலன் மற்றும் ஹீதர் நைட் உடன் இந்த சாதனையை பட்லரும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.