

பர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது. கடைசி போட்டி கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆட்டம் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர், களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜஸ்பிரீத் பும்ரா அணியை வழிநடத்தவுள்ளார். இதன்மூலம் கபில் தேவுக்கு பிறகு கேப்டனாகும் முதல் பந்து வீச்சாளர் என்றபெருமையை பும்ரா பெறுகிறார்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது. புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தின் வியூகத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டத்தை கையாண்டு வருகிறது. பேர்ஸ்டோ, நியூஸிலாந்தின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 78 சராசரியில் 394 ரன்கள் விளாசியிருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் நம்பமுடியாத வகையில் 120 ஆக இருந்தது.
ஸாக் கிராவ்லி, அலெக்ஸ் லீஸ், ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்க்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக் கூடியவர்கள். பந்து வீச்சில் மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகக்கூட்டணி சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பர்மிங்காம் ஆடுகளத்தில் கடைசியாக நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 6 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இந்த ஆடுகளத்தில் 8 டெஸ்டில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெற்றது இல்லை.